கோல் இல்லா வாழ்வு பாழ்!!!

கோல் இல்லா வாழ்வு பாழ்!!!
————————–
70வயதை நெருங்கும், வீட்டில் உள்ள பல பெருசுகள், கையில் walking stick கொடுத்தால் வறட்டு கவுரம் பார்த்து தொடமாட்டார்கள். விழுந்த பின்னே வரும் கடினங்களை தனியே எழுதலாம்.

எனக்கு தெரிந்த வரை 45-50வயதை தாண்டினாலே நாம் பல விதமான stickகுகளுக்கு depend ஆகி விட வேண்டியதுதான்.

உதாரணத்திற்கு சுத்தமாக கையை பின்னுக்கு கொண்டு போக முடியாத நிலை பலருக்கு உண்டு. நடு இரவில் முதுகு அப்படி ஒரு அரிப்பெடுத்தால், பக்கத்தில் உள்ள கணவனோ, மனைவியோ, பிள்ளையோ உதவிக்கு வர மாட்டார்கள். வந்தாலும், ஒன்று நகத்தை விட்டு பிராண்டி விடுவர், அல்லது நேசமணி வடிவேலு சூர்யாவிடம் சொல்வது போல, முதுகு வலித்துவிடப்போகிறது என தடவி விடுவர். நம்முடைய திருப்திக்கு ஏற்ற மாதிரி, இதற்கெல்லாம் ஒரே நிவாரணி முதுகு சொறியும் குச்சிதான்.(படத்தில் பார்க்கவும்) 50 ரூபாய் குச்சி நமக்கு ‘சுகம் எங்கே, சொறியும் இடத்தில்’ என ஒரு நம்பிக்கையை கொடுக்கும், அது நடுஇரவானாலும், யாரிடமும் பகலில் பேசிக்கொண்டிருந்தாலும். சீப்பு, பேனா எல்லாம் இதில் சேர்ந்தாலும், perfection கொடுப்பது இக்குச்சிதான்.

அடுத்து, பலருக்கும் காலை நடை செல்லும் முன்னோ, அலுவலகம் செல்லும் முன்னோ, ஷூ போட குனிந்தாகணும். குனிந்தால் ஒன்று இடுப்பு பிடித்துக்கொள்ளும் அல்லது தொப்பை இடைஞ்சலாகும். கூப்பிட்ட குரலுக்கு யாரும் காதலி/காதலன் போல இதோ வந்தேன் என ஷூ போட்டு விட தயாராக மாட்டார்கள். பலர் வீட்டில் முன்னறையில் இதற்கென ஒரு முக்காலி கூட இருக்கும். அப்படியும் குனிய இயலாதவர்களே அதிகம். இதற்கெல்லாம் ஒரெ நிவாரணி(படத்தை பார்க்கவும்). ஷூ சொருகும் stick. அதுவும் ரூ.50தான். ஷூ பின் சொருகி, நின்று கொண்டே ஒரு ‘அமுக்’. கால் ஷூ உள் உறைந்து விடும்.

அடுத்து, முக்கியமான, தினந்தோறும் தேவையான ஒரு அலுவல். முதுகு தேய்த்து ஜாலியாக குளிப்பது. சுகமாக இருக்கும், நம் கையாலேயே தேய்த்தால். சுகர், பிபி என பல காரணிகளால் நாம் தினம் விழுங்கும் அல்லோபதி மாத்திரைகள், கைகளை பின்னுக்கு கொண்டு செல்ல முடியாது freeze செய்து விடுகின்றன. சில வீடுகளில் பேரன், பேத்திகள் உள்ள வீட்டில் அவர்கள் ஜாலியாக எருமைக்கு தேய்ப்பதாக, பெருசுகளுக்கு சேவகம் செய்வதாக சில பல நாள் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவை எல்லாம் நிரந்தரம் அல்ல. இதற்கும் ஒரே நிரந்திர நிவாரணி. Amazonல் ரூ250க்கு முதுகு தேய்க்கும் stick. Liquid soapஐ அதில் விரவி பின்னுக்கு தேய்த்தால் முதுகு பளிச்.

அடுத்த்து வீடு கட்டும்போது, மர வேலை செய்பவன்கள் ஆறடி இருந்திருப்பாரோ என்னமோ, பல சமையலறைகளில் அலமாரிக்கள் எல்லாம் 6 அடியில் ஒய்யாரமாக கண்ணாடி கதவோடு தொங்கிக்கொடுக்கும். ஆறடி வளர்ந்த மகன் பாசத்தோடு அடுக்கி கொடுத்த நாளோடு ஓடியிருப்பான். தினந்தோறும் ஒரு ஒரு விஷயம் எடுக்கவும் stool போட்டு எடுத்தேன், கீழே விழுந்தேன் என்கிற கதைகள் அதிகம். இதற்கும் ஒரே நிவாரணி, பொருள் நகர்த்தும் Stick.(படத்தை பார்க்கவும்). எடுப்பதற்கு தோதாக வளைந்து காணப்படும். ஆனால் சரியான training வேண்டும். சில நேரங்களில் மாவு டப்பா எடுக்க தோதாகாது, நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள், டப்பாவை சரியாக மூடவில்லையெனில்!

இவ்வாறு துணி காயப்போட, பூப்பறிக்க என பல்வேறு appropriate stickகளுடனேயே காலம் தள்ள 45 வயதிற்கு மேற்பட்டோர் பழகிக்கொள்ள ஆரம்பித்தோமெனில், 80ஐ நெருங்குகையில் நம்மைத்தாங்கும் walking stick பயன்படுத்த பெரிதாக 
அலட்டிக்கொள்ள மாட்டோம். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?