செம்புப்பாத்திரத்தில் தண்ணீர்!

செம்புப்பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால் கோடி நன்மை என்பர்.ஒரு ஆசையில் யோசிக்காது வாங்கி விட்டேன். வாங்கிய புதிதில் இருந்த பளபளப்பு நான்கே நாளில் கரேல் என ஆக்சிடைஸ் ஆகி இளித்து விட, வீட்டில் எல்லோரும் ஒரே கேலி. பீதாம்பரி பவுடர் வாங்கி உதவி செய்பவளிடம் கொடுத்தால் மூஞ்சியை தூக்கிக்கொண்டு இரு முறை தேய்த்தாள். திரும்பவும் அதே ஆக்சிடைஸ்டு கருப்பாக, நானே கை சிவக்க தேய்த்தேன். 

இருமுறைதான், ஃப்ரோஃசன் தோள்கட்டு பிரச்சினையால் தோள்வலி எகிற, இதெல்லாம் தேவையா என்பது போல கணவர் பார்க்க, இரு நாட்கள் செம்பு சொம்பு, பரணை ஏறிவிடட்டுமா என்பது போல என்னை பாவமாக, கருந்திட்டுகளுடன் பார்த்தது. 
சரி, இதற்கு யூட்யூபில் ஏதாவது தீர்வு கிடக்காதா என ஏங்கி பல தீர்வுகளை பார்த்து, தோள்பட்டைக்கு உதவாத தீர்வுகளை புறந்தள்ளி லகுவான ஒன்றை கண்டுபிடித்தேன். 
என்னைப்போல மின்னும் செம்பிற்கு ஆசைப்பட்ட ஒரு நண்பி அருமையாக விளக்கம் காட்ட, ஒரு மாதிரி நம்பிக்கையற்று முயற்சித்தேன். என் வீட்டு உதவியாளர் பீதாம்பரிதானே ஒரே வழி என்று ஏளனமாக பார்க்க பார்க்க முயற்சித்தேன். என்ன ஒரு அதிசயம்! முயற்சியின் விளைவு, அதீத அதிசயம்! படத்தில் பாருங்கள்!

ரகசியம் இதுதான், ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்திருக்கும் பழைய இட்லி மாவு மட்டுமே இத்தனை மின்ன வைக்கிறது என்றால் நம்புவீர்களா? ரெண்டு ஸ்பூன் எடுத்து லைட்டாக தோளுக்கு வலிக்காது தேய்த்து பாருங்கள். கை மேல் பலன். இல்லை கை வலிக்காது பலன்!

இப்போதெல்லாம் என் உதவியாளரே தேய்த்துவிடுகிறாள். இப்படி industry standard bestpracticesஐ அவர்களுக்கும் சவுகரியம் செய்து கொடுத்து enable செய்தால்தானே நம்மிடம் நிலைத்து வேலை செய்வார்கள். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே!