நம் நாட்டில் எதையாவது ரிப்பேர் செய்யச்சொன்னால் செய்ய வேண்டியதை சரி செய்து விட்டு, மேலும் கொஞ்சம் எதையும் கொடக்கி விட்டு விடுவார்கள். அது நம் உடம்பாகட்டும், கார் ஆகட்டும், ஏசியாகட்டும், இதை ஒரு பேட்டர்னாக நான் பார்க்கிறேன்.
எதாவது உடல் சரியில்லையெனில் டாக்டரிடம் போனால், ஒன்றிற்கு சரிபடுத்தக் கொடுக்கும் மருந்து மற்ற அங்கங்களை பதம் பார்க்கிறது, அனுபவித்து இருப்பீர்கள். பிறகு அதை சரிசெய்ய ஓடுவோம். அதற்கு பெயர் side effect என பாலிஷாக மருத்துவர்கள் கூறுவர்.
கார் அல்லது பைக்கை செர்வீஸ் என்கிற பெயரில் கொடுத்து வீடு எடுத்து வந்த மறு நாளே, ஒன்று flat tyre ஆகும் அல்லது starter motor வேலை செய்யாது. அனுபவித்து இருப்பீர்கள். அதற்கு பெயர் வண்டிக்கு வயசாயிடுச்ச்ப்பா என mechanic கூறுவான்.
இப்போது இதை எதற்கு சொல்ல வருகிறேன் எனில், எங்கள் வீட்டு ஏசி ஒன்று 18ல் வைத்தால் தானே 26க்கு ஓடி சில நேரங்களில் வெளியில் உள்ள 32ஐயும் தாண்டி 40க்கு சென்றுவிடும். Mechanic sir, என மரியாதையுடன் ஒரு திங்கள் காலை அழைத்தோம்.

வந்தார். பார்த்தார். மாடிக்கு சென்று, ‘கேஸ் ஒழுவிடுச்சு சார்’ என்றார். ‘எவ்வளவு’ என்றார் மணிரத்னம் பாணியில் கணவர். 2500 என்றான் கூசாமல். சரியென்றோம். வந்தது கேஸ். சரியானது ஏசி. குளிர்ந்து படுத்தோம். நடு நிசியில் கணவரிடம், “வெறும் காத்துதாங்க வருது” என்றேன். டிவியை அணை இந்த கமல் பாட்டு வேற என திரும்பி படுக்க எத்தனித்தவரை, ஏசியில் இருந்துதான் ‘வெறும் காத்து’ என்றேன். கடுப்பானவர்,அதெல்லாம் ஒன்றுமில்லை, நீ டெம்பெரச்சரை கூட்டியிருப்பாய் என கண்ணைக் கிடுக்கிக்கொண்டே 42, 41,40 என குறைத்துக்கொண்டே 18ல் வைத்தார். அது அரை மணியில் 42க்கே எகிறியது.
காலை புலர, திரும்பவும் mechanic saar, எனக்கூப்பிட்டு, ரொம்ப ஸ்மார்ட்டாக “மெக்கானிக் சார், திரும்ப நீங்க நிரப்புன கேஸ் ஒழுவிடுச்சுன்னு நினைக்கிறேன்” என அவன் பாஷையிலேயே கதற, 2500 வாங்கிய கருணையில், அரை மணியில் வந்தார். சார், என்னா சார், வெளிய ஓடற ஃபேன் புட்டுக்கிச்சு, நீ பாட்டுனு உள்ள ஓட விட்டுருக்க என இரத்தஓட்டத்தை ஏற்றினான். திரும்பவும் மணிரத்னம் படபாணியில், ‘எவ்வளவு’ என்றார். 1800 என்றான் நா கூசாது. சரி அதே ப்ராண்டில் கிடைக்குமா என பச்சைமண்ணாக என்னவர் கேட்க அவனும் டிரை பண்றேன் சார் என மாயமானான்
மறு நாள், ஃபேனும், ‘புட்டுக்கொண்ட’ மோட்டரை ஒட்டிக்கொண்டு வந்து மாட்டிவிட்டு, சார் இனி ஒரு பிரச்சினையும் இல்ல, வந்ததுக்கு 200 போட்டுக்கொடு என ரூ.2000 பிடுங்கி கொண்டு பைக்கில் பறந்தான். இதோடு சனிக்கிழமை, மாலையாகிவிட்டது. நான் சும்மா இராமல், ஒரு 2 மணி நேரம் ஓட்டி பார்த்து கொடுத்திருக்கலாமோ (நாக்கில் சனியோ) என சொன்னதும், அதெல்லாம் இனி பிரச்சினை இல்லை என டிவியில் ‘மழை’ படம் பார்க்கத் தொடங்கினார். திடீரென ‘சொட்’ என ஒரு சத்தம். மழை படம், அதுதான் என நினைத்து திரும்பவேயில்லை நான். மறுபடியும் ‘சொட்’. ஏசியின் கீழ் இருந்த கேலண்டரில் சொட்டி சொட்டி நனைந்து பிறகு அந்த சொட் கீழே வைத்திருந்த அவர் ஆபீஸ் பையையும் நனைத்து கீழே வரவும் மழை பாதி முடிந்திருந்தது. மோட்டரை fix செய்யும் போது, கீழே செல்லும் பைப்பை ஏதோ நகர்த்திவிட்டு போயிருக்கான் ‘மெக்கானிக் சார்’.
நீ சொல்லும்போதே நினைச்சேன், இப்படி ஏதும் ஆகும் என்று பச்சை மண்ணான எனக்கு திட்டு விழுந்ததுதான் மிச்சம்.
அந்நேரமே mechanic saar என மறுபடியும் கூப்பிட்டால், engaged tone. மறு நாள் ஞாயிறு அன்று, 10 மணிக்கு கூப்பிட்டால், ‘எங்கள் வீட்டில் பிரியாணி, உங்கள் வீட்டில்?’ என்கிற ரிங் டோன கேட்கவே, பேசாமல் ஏசியின் கீழ் ஒரு தொட்டில் கட்டி அதில் வடியும் நீரை பாத்திரம் விளக்க ஆரம்பித்துவிட்டேன்.
நண்பர்களே, திங்களில் ஆரம்பித்த பிரச்சினை சனியில் எவ்வாறு முடிந்தது பார்த்தீர்களா? புதிதாக வாங்க தெம்பிருக்கு,
பேசாமல் வாங்கி இருக்கலாம் என பக்கத்து வீட்டாரிடம் புலம்பினால், இப்படிப்பட்ட ‘மெக்கானிக் சார்’ எல்லாம் எப்படி பிழைப்பார்கள்? எனக் கேட்கிறார் என்னவர்?!!?
மருந்தின் side effectல் இருந்து ஏசி ‘சொட்’ வரை எல்லாமே ஒரு அனுபவம்தான்!
You must be logged in to post a comment.