எனக்கு பிடித்த பாரதி. கண்ணனை சேவகனாக்கி, இன்றும் நம் பெண்கள் சேவகிகளால் படும் அவஸ்தையை அருமையாக எழுதியிருக்கும் – கண்ணன் என் சேவகன்:
பாரதியார், கண்ணன் மீது நீங்காத பற்றுக் கொண்டமையால், கண்ணனைத் தாயாக, தந்தையாக, நண்பனாக, சேவகனாக வைத்துப் பாடியுள்ளார். அதனுள் கண்ணனை சேவகனாகப் பாவித்துப் பாடிய பாடலொன்றைக் காணலாம்.
சேவகன் பொய்யுரைத்தல்:
கூலியை மிகுதியாக்க் கேட்பதும், முன்பு கொடுத்ததை மறப்பதும், வேலையுள்ள போது வராமல் வீட்டில் தங்கி விடுதலும், ஏன் நேற்று வேலைக்கு வரவில்லை என்று கேட்கையில் தொடர்பற்ற செய்திகளை தொடர்பாக்குதல் போன்று
“பானையில் தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார்
. . . . .
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள் என்பார்”
என்ற பொய்யொன்றை மறைக்க வேறொரு பொய்யைச் சொல்வார். தனக்கு வேண்டியவர்களிடம் தனிமையில் பேசிவிடுவர். வீட்டுச் செய்திகளை எல்லாம் வீதிக்கு கொண்டு செல்வர். எள் இல்லை என்றாலும் எங்கும் முரசறைந்து சொல்வர்.
“தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவர்
உள்வீட்டுச் செய்தி எலாம் ஊர் அம்பலத்து உரைப்பர்
எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசு அறைவார்”
என்று பாரதியார் சேவகனின் பொய்யுரைகளை எடுத்துரைக்கின்றனர். சேவகரால் அடைந்த துன்பம்:
“சேவகரால் பட்ட சிரம்ம் மிக உண்டு கண்டீர்
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை
இங்கிதனால் யானும் இடர்மிகுத்து வாடுகையில்”
பாரதியார், சேவகர்களால் படும் துன்பம் கொஞ்சமன்று எனினும் சேவகர் இல்லாவிடிலோ எச்செயலையும் செய்ய முடியாது என்று சேவகரால் தான் பட்ட துன்பத்தை நயம்பட கூறுகின்றார்.